ப. சிதம்பரம்

 

பழநியப்பன் சிதம்பரம் (P. Chidambaram, பிறப்பு: செப்டம்பர் 16, 1945) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

 

வாழ்க்கைக் குறிப்பு

இவர் இந்தியாவின், தமிழ்நாடு, மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழநியப்பன் செட்டியார்-இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு செப்டம்பர் 16, 1945 ஆம் நாளன்று நான்காவது மகனாகப் பிறந்தார். இவருக்கு ப. அண்ணாமலை, ப. லட்சுமணன் என்ற இரு அண்ணன்களும் உமா என்ற ஒரு தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.வழக்கறிஞராகப் பயிற்சிபெற்ற பொழுது உடன்பயிற்சி பெற்ற நளினி என்பவரைக் காதலித்தார். ஆனால், அக்காதலை சாதிவேறுபாட்டின் காரணமாக இவர் தந்தை பழனியப்பன் ஏற்க மறுத்தார். எனவே, நீதிபதி பி. எஸ். கைலாசம், சௌந்தரா கைலாசம் ஆகியோருக்கு மகளான, நளினியை 1968 திசம்பர் 11ஆம் நாள்  பதிவுத்திருமணம் செய்துகொண்டார்; பின்னர் அவர் நண்பர்கள் சாந்தகுமார், சுதர்சனம் ஆகியோரின் முன்முயற்சியால் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் பெரியார் திடலில் அவர்களது திருமணம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.

 

கல்வி

சென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு.

சென்னை லயோலா கல்லூரியில் பி.யூ.சி

சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்)

சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.

தொழில்

ப.சிதம்பரம் 1967ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் நாளிதழில் சிறிதுகாலம் பணியாற்றினார்.. சட்டம் பயின்ற இவர், மூத்த வழக்கறிஞர் நம்பியார் என்பவரிடம் இளம்வழக்கறிஞராகச் சேர்ந்து பயிற்சிபெற்றார். பி. எஸ். கைலாசம், கே. கே. வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து சிறிதுகாலம் தொழில்புரிந்தார்.[5] பின்னர் தனித்துத் தொழில்புரிந்து 1984ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞரானார்.

 

அரசியல் வாழ்க்கை

இந்திய தேசிய காங்கிரசில்

இவர், 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியின் தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சி. சுப்பிரமணியத்தின் பரிந்துரையால் உறுப்பினர் ஆனார். 1973ஆம் ஆண்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 1976ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பை வகித்தார்.[4] அப்பொழுது பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்த மைதிலி சிவராமன், பின்னாளில் இந்து இதழின் ஆசிரியாராகப் பொறுப்பேற்ற என். ராம் ஆகியோடு இணைந்து ரேடிக்கல் ரிவ்யூ (Radical Review) என்னும் இதழை வெளியிட்டு வந்தனர்.

 

1976ஆம் ஆண்டில் காமராசர் மறைவிற்குப் பின்னர் சிண்டிகேட் காங்கிரசு என்னும் நிறுவன காங்கிரசு இந்திராகாந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தபொழுது, சி. சுப்பிரமணியன் பரிந்துரையால், அந்நாளைய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கோ. கருப்பையா மூப்பனாரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு . 1976-77ஆம் ஆண்டில் அப்பதவியினை வகித்தார். நெருக்கடிநிலைக் காலத்தில் 1976ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் இராஜசிங்கமங்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தியின் சொற்பொழிவை மொழிபெயர்த்து அவரின் அறிமுகத்தைப் பெற்றார்.

 

1985 ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் (இந்திரா) இணைச் செயலாளர் ஆனார்.

 

தமிழ் மாநில காங்கிரசு

1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ்நாட்டு உறுப்பினர்களும் தலைவர்களில் பெரும்பாலானோரும் இதனை எதிர்த்தனர். அவர்கள் கோ. கருப்பையா மூப்பனார் தலைமையில் பிரிந்துசென்று தமிழ் மாநில காங்கிரசு என்ற புதியகட்சியை 1996 மார்ச் 29ஆம் நாள் தொடங்கினர். அக்கட்சியின் நிறுவுநர்களில் ஒருவராகப் ப.சிதம்பரம் விளங்கினார்.

 

காங்கிரசு சனநாயகப் பேரவைத் தொடக்கம்

2001 ஆம் ஆண்டில் தமிழ்மாநில காங்கிரசு கட்சி, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபொழுது அதனை எதிர்த்த ப.சிதம்பரம் காங்கிரசு சனநாயகப் பேரவை என்ற கட்சியை உருவாக்கி அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

 

மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில்

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு சனநாயகப் பேரவையின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசின் சின்னத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரானார் ப. சிதம்பரம். அதனைத் தொடர்ந்து 2004 சூன் 5ஆம் நாள் நடைபெற்ற காங்கிரசு சனநாயகப் பேரவையின் பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றின் முடிவின்படி[8] அக்கட்சி 2004 நவம்பர் 25ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தது.

 

தேர்தலில் போட்டி

ப. சிதம்பரம் 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சி. சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்; ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.[5] மாறாக, 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் தோல்வியடைந்தார். இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது அந்த ஒரு முறைதான்.

 

ஆண்டு     கட்சியின் பெயர்        தொகுதியின் பெயர் சட்டமன்றம்/ நாடாளுமன்றம்          பெற்ற வாக்குகள்      முடிவு

1977   காங்கிரசு   காரைக்குடி           சட்டமன்றம்                                  தோல்வி

1984   இந்திய தேசிய காங்கிரசு      சிவகங்கை            மக்களவை            வெற்றி

1989   இந்திய தேசிய காங்கிரசு      சிவகங்கை            மக்களவை            வெற்றி

1991   இந்திய தேசிய காங்கிரசு      சிவகங்கை            மக்களவை            வெற்றி

1996   தமிழ் மாநில காங்கிரசு          சிவகங்கை            மக்களவை            வெற்றி

1999   தமிழ் மாநில காங்கிரசு          சிவகங்கை            மக்களவை            தோல்வி

2004   இந்திய தேசிய காங்கிரசு      சிவகங்கை            மக்களவை            வெற்றி

2009   இந்திய தேசிய காங்கிரசு      சிவகங்கை            மக்களவை            வெற்றி

2016 சூலை 05       இந்திய தேசிய காங்கிரசு      மகாராட்டிரம்       மாநிலங்களவை அமைச்சர்

 

1985 செப்டம்பர் 21ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் ஒன்றியத் துணை அமைச்சராக (Union Deputy Minister) நியமிக்கப்பட்டார்.

1985 திசம்பர் 26 ஆம் நாள் முதல் 1989 திசம்பர் 02ஆம் நாள் வரை பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தில் ஒன்றிய அரசு அமைச்சராகவும் (Union Minister of State) [14] 1986 முதல் 1989 வரை உள்விவகார அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான ஒன்றிய அரசு அமைச்சராகவும் பதவிவகித்தார்.

 

1991 சூன் 21 ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1991 செப்டம்பரில் இவரும் இவர் மனைவி நளினியும் FFSL(Fair Growth Financial Services Limited) நிறுவனத்தின் 15000 பங்குகளை 1.5. இலட்சம் பங்குகளை வாங்கினர். இந்நிறுவனம் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலில் தொடர்புகொண்டிருந்ததால் 1992 சூலை 5 ஆம் நாள் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.

 

1995ஆம் ஆண்டில் மீண்டும் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டு 1996 மே 16ஆம் நாள வரை அப்பதவியை வகித்தார்.

1996 சூன் 1ஆம் நாள் முதல் 21 April 1997 ஏப்ரல் 21 ஆம் வரை ஒரு முறையும்1997 மே 1 முதல் 1998 மார்ச் 19ஆம் நாள் வரை மறுமுறையும் இந்திய ஒன்றிய நிதி அமைச்சராகப் பதவிவகித்தார். 1996 சூன் முதல் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவாகரங்கள் அமைச்சரவைக் கூடுதலாகக் கவனித்தார்.

 

2004 மே 22ஆம் நாள் முதல் 2008 நவம்பர் 30 ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.

2008 திசம்பர் 1ஆம் நாள் முதல் 2012 சூலை 31ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய உள்விவகார அமைச்சராகப் பதவிவகித்தார்.

2012 சூலை 31ஆம் நாள் முதல் 2014 மே 26ஆம் நாள வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.

இவர் மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[16] 1997-98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது.

 

கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாகப் பெறுவதற்காக ப. சிதம்பரம் உதவினார் என்னும் குற்றச்சாட்டில் 21 ஆகஸ்ட் 2019 அன்று இரவு சிபிஐ மற்றும் அமலாக்கதுறையினர் இவரைக் கைது செய்தனர்.

 

ப. சிதம்பரம்

 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பதவியில் 5 சூலை 2016 – 10 டிசம்பர் 2021

தொகுதி :  மகாராட்டிரம்

இந்திய நிதியமைச்சர் பதவியில் 31 சூலை 2012 – 26 மே 2014

 

தொகுதி    சிவகங்கை, தமிழ்நாடு

தனிப்பட்ட விவரங்கள்

பிறப்பு :     16 செப்டம்பர் 1945 (அகவை 79)

கண்டனூர், பிரித்தானிய இராச்சியம்

(தற்போது தமிழ்நாடு, இந்தியா)

அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (1972-1996), (2004-தற்போது வரை)

பிற அரசியல்

தொடர்புகள்      தமிழ் மாநில காங்கிரசு (1996-2001)

காங்கிரசு சனநாயகப் பேரவை (2001-2004)

துணைவர்         : நளினி சிதம்பரம்

பிள்ளைகள் :     கார்த்தி சிதம்பரம் (மகன்)

முன்னாள் மாணவர்  மாநிலக் கல்லூரி, சென்னை

சென்னை சட்டக்கல்லூரி

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

Scroll to Top