சிவ நாடார்
சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். எச். சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்த சிவ நாடார், அந்த பொறுப்பிலிருந்து 2021 சூலை 19 (திங்கட்கிழமை) அன்று பதவி விலகினார். இருப்பினும் 76 வயதாகும் சிவ நாடார் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் தொடர உள்ளார்.
ஆரம்ப காலம்
சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.
பெருமைகள்
1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு போர்ப்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்காரப் பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.
முதலீடு
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிக்கொடுக்கும் என்று தெரிவித்தார்.
சிவ நாடார்
பிறப்பு 14 சூலை 1945
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
பணி கௌரவ தலைவர் & ஆலோசகர், எச்சிஎல் டெக்னாலிஜிஸ்
நிறுவனர், எஸ் எஸ் என் அறக்கட்டளை
சொத்து மதிப்பு US$23.8billion (2021)
வாழ்க்கைத்துணை: கிரண் நாடார்
பிள்ளைகள்: ரோசிணி மல்கோத்ரா